மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 8 ஜூலை, 2017

திருக்குறள் -1. நட்பாராய்தல்


நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

ஒருவருக்கு நட்பு அமைவது என்பது, மணவாழ்க்கை போல வாழ்நாள் முழுவதும்  இருக்க கூடியது. ஒருவனது வாழ்வில் ஏற்றம் இறக்கம் வருவது அவனுக்கு அமைந்த நண்பர்களை பொறுத்து தான். எனவே நாம் எப்படி வாழ்க்கை துணையை ஆராய்ந்து  தேர்ந்தெடுக்குறோமோ அப்படி நல்ல நண்பர்களை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வள்ளுவன் சொல்கிறான்.

அதனால் தான் நடப்பாராய்தல் என்ற அதிகாரத்தில் பத்து குறளில் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறான்

இன்றைக்கு, சமூக வலைத்தளங்கள் எவ்வளோவோ வந்துவிட்டன. முகநூலில் நாம் எத்தனையோ நண்பர்களை பார்க்கிறோம் பழகுகிறோம். நட்பு வட்டம் விரிந்து கொண்டே போகிறது. நட்பு காதலாகி, காதல் திருமணத்தில் முடிந்து, இறுதியில் விவாகரத்தில் வந்து நிற்கிறது.

அதைப்போல நல்ல நண்பனைப் போல பழகி நகைகளை பறிப்பதும், செல் போன்களைப் பறிப்பதும், பணத்தை வங்கியில் போட சொல்வதும் வாடிக்கையாய்ப் போய்விட்டது . இதனை நாம் அன்றாடம் பத்திரிக்கையில் படிக்கிறோம். நல்ல நண்பர்களை தெரிந்தெடுக்காதது தான் காரணம்.

சமூக வலைத்தளங்கள் சமீபத்தில் வந்தது தான். ஆனால் இதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வள்ளுவன் சொன்ன போது எந்த சமூக வலைத்தளமும் இல்லைஇருந்தாலும் அன்றைக்கு வள்ளுவன் சொன்னது இன்றைக்கு எவ்வளவு பொருத்தமாக  இருக்கிறது என்பதை வியந்து பார்க்க வேண்டும்.

இன்றைக்கு  நல்ல அன்பிற்காக ஏங்க கூடிய நிறைய பேர் இருக்கிறார்கள்.... அவர்களை இனங்கண்டு ஏமாற்ற கூடிய சில கூட்டம் இருந்து வருவதை அன்றாட வாழ்வில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களிடமிருந்து நாம் தற்காத்து கொள்ள சில சில குறிப்புகளை (டிப்ஸ்வள்ளுவன் தருகிறான்அவன் சொன்ன பத்து குறளும் (குறிப்புகளும்நம்மை எச்சரிக்கை  ஊட்டி நல்ல நட்பை தெரிந்தெடுக்க சொல்கிறது

இதோ முதல் குறளில், முதல் எச்சரிக்கை,

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று ஆராயாமல் தீய நண்பனை   தேர்ந்தெடுத்து அவனிடம் நட்பு கொள்வதை போன்று துன்பம் தருவது  வேறொன்றும் இல்லை. ஏனென்றால் அவனிடம் நட்பு கொண்ட பின் அவனை விட்டு விலகி வரமுடியாத நிலைக்கு இருவரும் தள்ள பட்டு விடுவார்கள். அதாவது புலி வாலை பிடித்த கதை போல ஆகிவிடும் என்று எச்சரிக்கை கொடுக்கிறான் வள்ளுவன்.  

இதனை நல்ல நண்பர்களை தேர்ந்தெடுக்க மாத்திரம் வள்ளுவன் அறிவுறுத்தி சொல்லி இருக்கிறான் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது . அவனது நோக்கம் நல்ல தலைவர்களையும், நல்ல குருவையும், அதை போல  தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் வள்ளுவன் நடப்பாராய்தல் ஊடாக சொல்லி இருக்கும் செய்தி.

ஒரு நல்லவனை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கவில்லை என்றால் திருமூலர் சொன்னதை போல,

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழுமாறே

என்று பாழும் குழியில் தான் விழ வேண்டும்.

எனவே வள்ளுவன் சொன்னது போல முதலில் நல்ல நட்ப்பை  தேர்ந்தெடுக்கும் போது ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த ஆராய்ந்து என்ற வார்த்தைக்கு நாடாது என்று பதம் போடுகிறான்.

     நல்ல நட்ப்பு அமைவது இறைவன் கொடுத்த வரம் மாத்திரம் அல்ல, நாம் முன் செய்த பாக்கியமும் கூட. எனவே நல்ல நட்ப்பை தேர்ந்தெடுப்போம்.



கே.பி.ரோஹித்கணேஷ்
(சொற்பொழிவாளர், கட்டுரையாளர்)

திருச்சி   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக